Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 13 Jan 2026

சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பொங்கல் பரிசு மழை

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு அடுத்த மாத இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் களத்திற்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாக்காளர்களை கவரும் வகையில் பரிசுகள் வழங்கும் நடவடிக்கைகள் தமிழகமெங்கும் தீவிரமடைந்துள்ளன.

இந்தாண்டு பொங்கலுக்கு, தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இதுவரை இல்லாத வகையில் ரூ.3,000 ரொக்கமாக வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பரிசுத் தொகையை பெற்றுச் செல்கின்றனர்.

அதே நேரத்தில், ஆளும் திமுக மட்டுமின்றி, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் தங்கள் தொகுதிகளில் தனிப்பட்ட முறையில் பொங்கல் பரிசுகளை வழங்கி வருகின்றன. மிக்சி, கிரைண்டர், சமையல் பாத்திரங்கள், துணிமணிகள், அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டிகள் பல தொகுதிகளில் விநியோகிக்கப்படுகின்றன.

திருச்சி மேற்கு தொகுதியில், அமைச்சர் நேரு ஏற்பாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் ரூ.5,000 மதிப்புள்ள பொங்கல் பரிசுப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை விருகம்பாக்கம், துறைமுகம், சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சில இடங்களில் விளையாட்டு போட்டிகள், கோலப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதன் வாயிலாகவும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும், வீடு வீடாக சென்று காலண்டர், வேட்டி, சட்டை, சேலை போன்ற பொருட்களும் விநியோகிக்கப்படுகின்றன. இவற்றில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் கட்சி நிர்வாகிகளின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு மட்டுமின்றி, கட்சி நிர்வாகிகளுக்கும் கணிசமான அளவில் ரொக்கத் தொகை மற்றும் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனால் கட்சி நிர்வாகிகள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவுக்கு போட்டியாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளும் தங்கள் தொகுதிகளில் பொங்கல் பரிசுகளை வழங்க வேண்டும் என கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த பொங்கல் பண்டிகை வாக்காளர்களுக்கு ‘பரிசு மழை’ கொண்ட பண்டிகையாக மாறியுள்ளது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்