Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 18 Jan 2026

ஏழைகளுக்கான நலத்திட்டங்களை தடுக்கிற அரசுகள் தண்டிக்கப்பட வேண்டும் : பிரதமர் மோடி

சிலிகுரி : நாட்டின் வளர்ச்சிக்கும், ஏழை மக்களுக்கான நலத்திட்டங்களுக்கும் தடையாக செயல்படும் எந்த அரசையும் மக்கள் தண்டிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து அவர் பேசுகையில், மத்தியில் பாஜ அரசு பொறுப்பேற்ற பிறகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு உரிய மரியாதை கிடைத்ததாக தெரிவித்தார். இந்தியா கேட் அருகே நேதாஜியின் சிலை நிறுவப்பட்டதோடு, அந்தமான்–நிக்கோபரில் உள்ள தீவிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டதாக குறிப்பிட்டார்.

மேலும், வங்க மொழிக்கு செம்மொழி அந்தஸ்தும், துர்கா பூஜாவிற்கு யுனெஸ்கோ பாரம்பரிய அங்கீகாரமும் பாஜ அரசின் தொடர் முயற்சிகளால் கிடைத்ததாக கூறினார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசில் திரிணமுல் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போதும், இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என விமர்சித்தார்.

ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், சுவாமி விவேகானந்தர் போன்ற பெருமக்களை தேசிய அளவில் பாஜ அரசு கொண்டாடி வருவதாகவும், வளர்ச்சியையும் பாரம்பரியத்தையும் இணைத்து ஆட்சி நடத்துவதாகவும் மோடி தெரிவித்தார்.

மத்திய அரசின் நலத்திட்டங்களை மேற்கு வங்க திரிணமுல் காங்கிரஸ் அரசு திட்டமிட்டு தடுத்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், மீனவர்களுக்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளத்திற்கே மாநில அரசு ஒத்துழைக்க மறுப்பதாக கூறினார். இதனால் மத்திய திட்டங்களின் பலன்கள் மக்களிடம் சென்றடையவில்லை என்றார்.

குழந்தைகளின் எதிர்காலத்தையும் ஏழைகளின் நலனையும் பாதிக்கும் அரசு நீக்கப்பட வேண்டாமா? மேற்கு வங்கத்தை காப்பாற்ற வேண்டாமா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டார். இரட்டை இன்ஜின் அரசு மாநிலத்தில் அமைய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்