தர்மம் வழிநடத்தும் வரை பாரதம் விஸ்வகுரு – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
தர்மம் நிலைத்திருக்கும் வரை பாரத நாடு உலகிற்கு வழிகாட்டும் விஸ்வகுருவாகத் தொடரும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியாவில் உள்ள ஆன்மிக ஞானம் உலகில் வேறு எங்கும் இல்லை என்றும், அது நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பெரும் பாரம்பரியம் என்றும் கூறினார்.
தர்மம் என்பது எந்த ஒரு மதத்திற்கும் மட்டும் உரியது அல்ல; அது ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் இயக்கும் நெறிமுறை என அவர் விளக்கினார். மனித வாழ்க்கை மட்டுமின்றி இயற்கையும் தர்மத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது என்றும், ஒவ்வொரு உயிருக்கும் தனித்த கடமை தர்மத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்றும் கூறினார்.
மேலும் சத்ரபதி சம்பாஜி நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சமூகத்தில் இருந்து ஜாதியை ஒழிக்க வேண்டுமெனில், முதலில் மனிதர்களின் மனங்களில் இருந்து ஜாதி எண்ணம் அகற்றப்பட வேண்டும் என்றும், அது நிகழ்ந்தால் பத்து முதல் பன்னிரண்டு ஆண்டுகளில் ஜாதி முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.