Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 30 Nov 2018

விஜய் மல்லையாவுக்கு வாதாடும் ப சிதம்பரம்

பெங்களூரு வங்கி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் வாதாட வந்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் மல்லையா வங்கிகளில் பல்லாயிரம் கோடிக் கணக்கில் கடன் வாங்கி விட்டு திருப்பித் தராமல் இருந்துள்ளார். அதனால் சிபிஐ நடவடிக்கை எடுக்க இருந்த போது நாட்டை விட்டு லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார். மல்லையா தப்பி ஓட பாஜக உதவி செய்ததாக காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறாது. விஜய் மல்லையா மீதான வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவற்றில் ஒன்றாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு வழக்கில் விஜய் மல்லையா தலைவராக இருந்த யுனைடெட் ஸ்டிரீட் லிமிடெட் என்னும் நிறுவனம் ஐடிபிஐ வங்கியிடம் வாங்கிய கடன் தொகையை திருப்பி தரததற்கு விஜய் மல்லையா பொறுப்பு என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக  மூத்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் வாதாடுகிறார். விசாரணையில் ப சிதம்பரம், “விஜய் மல்லையாவுக்கும் யுனைடெட் ஸ்டிரிட் நிறுவனத்தின் கடனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.   ஏனெனில் அந்த கடன் வாங்கும் போது அவர் அந்த நிறுவனத்தில் 2% பங்குதாரராக மட்டுமே இருந்தார்.   மேலும் இந்த கடன் தொகை முழுவதுமாக செலுத்தப் பட்டுள்ளதால் வங்கி அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும்” என வாதிட்டார். ஐடிபிஐ சார்பில் வாதிடும் வழக்கறிஞர், “ விஜய் மல்லையா யுனைடெட் ஸ்டிரீட் நிறுவனத்தின் தலைவராக இருந்த போது இந்த கடன் வாங்கபட்டது. அது மட்டுமின்றி விஜய் மல்லையா இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்ததால் தான் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்கு வங்கி கடன் அளித்தது கிங்ஃபிஷர் நிறுவனக் கடனுக்கு யுனைடெட் ஸ்டிரிட் உத்திரவாதம் அளித்துள்ளது.   மேல் விவரங்களை அளிக்க கால அவகாசம் தேவை” என பதில் அளித்தார். அதை ஒட்டி நீதிபதி வரும் 17 ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப சிதம்பரம் இந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக வாதிடுவது அரசியல் உலகில் கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.   ஒரு புறம் பாஜக அரசை விஜய் மல்லையா விவகாரத்தில்  குற்றம் சாட்டியபடி மற்றொரு பக்கம் அவருக்கே வாதாடுவது குறித்து மக்கள் இணைய தளங்களில் மிகவும் கேலி செய்து வருகின்றனர்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்