முக்கிய துறைகளில் உள்நாட்டு ஏஐ தொழில்நுட்பம் அவசியம் – பிரதமர் மோடி வலியுறுத்தல்
புதுடில்லியில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று ஏஐ துறையில் பணிபுரியும் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலில், முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், ஐஐஐடி ஹைதராபாத், ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி பாம்பே ஆகிய கல்வி நிறுவனங்களின் நிபுணர்கள் கலந்து கொண்டனர். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் இணையமைச்சர் ஜிதின் பிரசாதாவும் இதில் பங்கேற்றனர்.
கலந்துரையாடலின்போது பேசிய பிரதமர் மோடி, வெளிப்படையான, பாரபட்சமற்ற மற்றும் பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியா உறுதியாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார். ஏஐ தொழில்நுட்பத்தின் நெறிமுறை பயன்பாட்டில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், திறன் மேம்பாடு மற்றும் மனித வள வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, அனைத்து துறைகளிலும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டு தேசிய வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்றார். முக்கிய துறைகளில் உள்நாட்டு தொழில்நுட்பங்களை முன்னுரிமையுடன் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
யுபிஐ (UPI) மூலம் இந்தியா தனது தொழில்நுட்ப திறமையை உலகிற்கு நிரூபித்துள்ளது. அதேபோல், செயற்கை நுண்ணறிவு துறையிலும் இந்தியா உலகிற்கு தனித்துவமான, நம்பகமான தீர்வுகளை வழங்க முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.