போக்சோ வழக்கில் தவறிழைத்த போலீசார் மீது நடவடிக்கை என்ன? – அரசிடம் உயர் நீதிமன்றம் கடும் கேள்வி
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக, கடந்த 2024ஆம் ஆண்டு அவரது பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபரின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும், இன்ஸ்பெக்டர் தங்களை தாக்கியதாகவும் சிறுமி மற்றும் அவரது பெற்றோர் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் சி.பி.ஐ. விசாரணை உத்தரவை ரத்து செய்து, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்கவும், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரி, சிறுமியின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்சோ சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் அரசிடம் கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், குற்ற வழக்கு பதிவு செய்வதும், துறை ரீதியான நடவடிக்கையும் வேறு வேறு எனக் குறிப்பிட்டனர். பின்னர், 2024ஆம் ஆண்டிலேயே துறை ரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், சட்டத்தை பாதுகாக்க வேண்டிய போலீசாரே போக்சோ சட்டத்தை மீறியுள்ளதாக கடுமையாக சாடினர். தவறிழைத்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வது தண்டனை அல்ல என்றும், அவர்களை காப்பாற்ற அரசு ஏன் முயலுகிறது என்றும் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான துறை ரீதியான நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.