Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 02 Jan 2026

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.5000 ரொக்கம் வழங்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

பொங்கல் திருநாள் இன்னும் 13 நாட்களில் வரவிருக்கும் நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ள திமுக அரசை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.5,000 ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளிடமிருந்து மஞ்சள் கிழங்கு, வெல்லம், கரும்பு போன்ற பொருட்களை கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் குறைந்த தொகையை மட்டுமே ஒதுக்கி, பொதுமக்களையும் விவசாயிகளையும் ஏமாற்றும் செயலில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

வருடா வருடம் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக இத்தனை நாட்கள் முன்கூட்டியே கொள்முதல் செய்யாதது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். கடைசி நேரத்தில் அவசர கொள்முதல் செய்து கண்துடைப்பாக செயல்படுவது விவசாயிகளுக்கு நியாயமல்ல என்றும் கூறினார்.

ஆட்சி முடிவடையும் தருவாயிலாவது அரசியல் பாசாங்குகளை விட்டு விட்டு, விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொருட்களை கொள்முதல் செய்து, ரூ.5,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்