Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 04 Jan 2026

சுக்மா படேசெட்டி: சத்தீஸ்கரின் முதல் நக்சல் இல்லாத கிராமம்

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள படேசெட்டி கிராமம், மாநிலத்தின் முதல் நக்சல் இல்லாத கிராமமாக மாறியுள்ளது. இந்தியாவில் நக்சலிசம் 2026 மார்ச் 31க்குள் முற்றிலும் ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்ததைத் தொடர்ந்து, நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

சத்தீஸ்கர், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிஷா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்புப் படைகள் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பின் மத்திய குழு உறுப்பினரான பசவராஜ் கடந்த ஆண்டு சத்தீஸ்கரில் கொல்லப்பட்டார். சமீபத்தில் ஆந்திராவில் நடந்த தேடுதல் வேட்டையில் முக்கிய தளபதி மாத்வி ஹித்மா அவரது மனைவி உட்பட ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த தொடர் நடவடிக்கைகளால் நக்சல் அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரணடைந்து வருகின்றனர். சரண் அடைந்தவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதி அளித்தபடி நிதியுதவி மற்றும் மறுவாழ்வு திட்டங்களை வழங்கி வருகின்றன.

மேலும், நக்சல் பாதிப்புள்ள கிராமங்களில் மக்கள் தாங்களாகவே நக்சலைட்டுகளை சரணடையச் செய்தால், அந்த பஞ்சாயத்துக்கு 1 கோடி ரூபாய் வளர்ச்சி நிதி வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தையும் சத்தீஸ்கர் அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் பயனாக, படேசெட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த 11 நக்சலைட்டுகள் ஒரே நேரத்தில் சரணடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கிராம வளர்ச்சிக்காக உடனடியாக 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சரணடைந்த ஒவ்வொருவருக்கும் தலா 50,000 ரூபாய் உடனடி நிதியுதவியும், மறுவாழ்வு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக குண்டுச் சத்தமும், மிரட்டல்களும் நிறைந்திருந்த இந்த கிராமத்தில் தற்போது அமைதி நிலவுகிறது. சுற்றியுள்ள 8 குக்கிராமங்களில் 6 இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு வரை மட்டுமே இருந்த பள்ளி, தற்போது மேல்நிலைக்குத் தரம் உயர்த்தப்பட உள்ளது. ஆதார் அட்டைகள், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ அட்டைகள் வழங்க சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்