Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 04 Jan 2026

ஆட்சிக்கு ஆபத்து என்ற பயத்தால் நிரந்தர டிஜிபி நியமனம் இல்லை – சேலத்தில் இபிஎஸ் கடும் தாக்கு

சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக அரசின் நிர்வாகத் திறன், சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் ஊழல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

தமிழகத்திற்கு இதுவரை நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற அச்சத்தால் தான் முதல்வர் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்து வருகிறார் என்றார். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் மாநில வளர்ச்சி சாத்தியம். ஆனால், தற்போது மக்கள் அஞ்சி வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

திமுக ஆட்சியில் லஞ்சம், ஊழல், கொள்ளை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டிய இபிஎஸ், போதைப்பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படாமல் இளைஞர்கள் சீரழிந்து வருவதாகவும் கூறினார். போக்சோ வழக்குகளின் எண்ணிக்கையை மேற்கோள் காட்டி, சிறுமிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக சாடினார்.

மேலும், திமுகவில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுவதாக கூறிய அவர், கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக உதயநிதி துணை முதல்வரானார் என விமர்சனம் செய்தார். அதிமுகவில் சாதாரண தொண்டனும் பொதுச்செயலாளராக வர முடியும் என்றார்.

அரசு நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறும் முதல்வர், கார் பந்தயம், கடலில் பேனா சிலை போன்றவற்றிற்கு கோடிக்கணக்கில் செலவு செய்வது நியாயமா என கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சி அமைந்தால் இவை அனைத்துக்கும் உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், 100 நாள் வேலைத்திட்டம் 180 நாட்களாக உயர்த்தப்படும் என இபிஎஸ் தெரிவித்தார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்