2026ல் தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி; திமுக ஆட்சிக்கு முடிவு – புதுக்கோட்டையில் அமித்ஷா அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பயண நிறைவு விழா மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “2026 ஏப்ரல் 26-ம் தேதி தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமையும். வரும் நாட்களில் பாஜ, அதிமுக மற்றும் சில கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்போம். எப்பாடுபட்டாவது திமுக ஆட்சியை ஒழிப்போம். முடிவு கட்டியே தீருவோம்” என்று கூறினார்.
தமிழகத்தில் ஊழல் மிகுந்த கட்சி திமுக என குற்றம்சாட்டிய அவர், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், ஒரே குடும்ப ஆட்சியை தொடர்வதே திமுகவின் நோக்கம் என்றும் விமர்சித்தார். ஸ்டாலின் மகன் உதயநிதியை முதல்வராக்கும் கனவு ஒருபோதும் நிறைவேறாது என அவர் தெரிவித்தார்.
மேலும், திமுக ஆட்சி தமிழுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டை மறுத்து, மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கியது தேஜ கூட்டணி அரசே எனவும் விளக்கினார்.
தமிழகத்தில் ஊழல் அமைச்சர்கள் அதிகம் உள்ளதாக கூறிய அமித்ஷா, மணல், நிலக்கரி, கருப்புப் பணம் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை சுட்டிக்காட்டினார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதி குறித்து பேசிய அவர், 2014க்கு பின் மோடி அரசு 11 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
2026ல் தமிழகமும் மேற்கு வங்கமும் பாஜ கூட்டணியின் கட்டுப்பாட்டில் வர வேண்டும் என அழைப்பு விடுத்த அவர், பெரும்பான்மை பலத்துடன் ஜார்ஜ் கோட்டையை அடைவோம் என உறுதி தெரிவித்தார்.