செய்திகள் •
05 Dec 2018
தெளிவுப் பாதையின் நீச தூரம்- தடை செய்யபட்ட படம் திரையிட முடிவு
" தெளிவுப் பாதையின் நீச தூரம்" என்கின்ற தமிழ் திரைப்படம்
மாநில மற்றும் மத்திய தணிக்கை துறையினால் தடை செய்யப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் இந்த திரைப்படத்தை சென்னையில் கோடம்பாக்கம் எம் எம் ஸ்டுடியோவில் பொதுமக்கள் பார்வைக்காக திரையிடுவதாக ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இது கோவை குண்டு வெடிப்பு கலவரத்தை மையப்படுத்தியும் , இந்து முன்னணி தலைவர் திரு இராம கோபாலன் அவர்களை குறித்தும் மேலும் இந்து இயக்கங்கள் குறித்தும் அவதூறு கற்பிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது இந்த படம்.
மீண்டும் மதக் கலவரம் உண்டாக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் கெட்ட உள்நோக்கத்தோடும்
திரையிட முயற்சிக்க கூடிய இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தக்கோரி இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் இராம. இரவிக்குமார் மாநில பொதுசெயலாளர் அவர்களால் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஸ்டூடியோ அருண் எழுதிய பதிவு....
மக்கள் பார்க்கும் உரிமை மறுக்கப்பட்ட புதிய திரைப்படம் "தெளிவுப்பாதையின் நீச தூரம்" திரையிடல்
09.12.2018, ஞாயிறு மாலை 6 மணிக்கு.
MM திரையரங்கம், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் (கோடம்பாக்கத்தில் இருந்து நுங்கம்பாக்கம் செல்லும் வழியில், கோடம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் கடந்ததும் 200 மீட்டர் இடைவெளியில் வலதுபுறம் MM திரையரங்கம் இருக்கும். இரு சக்கர வாகனத்தில் வரும் நண்பர்கள் சிறிது தூரம் சென்று யு டர்ன் செய்து வரவேண்டும்)
நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக படைப்பாளிகள் பக்கம் உள்ள நியாயங்களை, அவர்களது படைப்புகள் மக்களை சென்று சேர வேண்டிய அவசியத்தை பேசி வருகிறது. எந்த நாட்டிலும் இல்லாத அதிகார போதை இந்தியாவில் உள்ள தணிக்கை துறைக்கு மட்டும் இருக்கிறது. ஒரு படைப்பாளியின் படத்தை குறிப்பிட்ட காட்சிகளை நீக்க சொல்லவோ, அல்லது படத்தை திரையிடவே சான்று அளிக்க முடியாது என்று சொல்லக்கூடிய அதிகாரம் தணிக்கை அமைப்பிற்கு இல்லை. ஆனால் இந்திய தணிக்கை துறை தொடர்ச்சியாக இப்படியான குறுக்கீடுகளை படைப்பாளிகளிடம் நிகழ்த்தி வருகிறது. தமிழ் ஸ்டுடியோ பேரியக்கம் இதனை தொடர்ச்சியாக கண்டித்து வருகிறது. அண்மையில் எடுக்கப்பட்ட நண்பர் அரவிந்த் இயக்கிய தெளிவிப்பாதையின் நீச தூரம் திரைப்படத்திற்கும் இவ்வாறு தணிக்கை பிரச்னை நேர்ந்திருக்கிறது. ஆனாலும் ஒரு படைப்பாளிக்கு தன்னுடைய படைப்பாளி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பிருக்கிறது. அதில் தமிழ் ஸ்டுடியோ போன்ற சமூக திரைப்பட இயக்கங்களும் பங்கு கொள்ள வேண்டும்.
இந்த திரைப்படம் எப்படியான படம், நல்ல படமா? அரசியல் படமா? விவாதத்திற்குரிய படமான என்பதெல்லாம் படம் பார்த்தபிறகு பார்வையாளர்கள் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. பார்வையாளர்களை சென்று சேராமலேயே இது சார்ந்து கருத்துக்களை முன்வைக்க இயலாது. முதலில் படத்தை பார்வையாளர்கள் பார்க்கட்டும் என்கிற அடிப்படையிலும், படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு தமிழ் ஸ்டுடியோ எப்போதும் துணை நிற்க வேண்டும் என்கிற நோக்கத்திலும் இதனை திரையிடுகிறோம். அவசியம் வந்து பாருங்கள். படைப்பாளிகளுக்கு துணையாய் இருங்கள். திரண்டு வாருங்கள், உங்கள் வருகையை படைப்பாளிக்கு உரிய உத்வேகத்தை கொடுக்கும்.