Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 10 Mar 2026

வெளிநாட்டு பங்கு வழக்கு: தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வெளிநாட்டு நிறுவன பங்குகள் வாங்கிய விவகாரத்தில் தி.மு.க. எம்.பி ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்காக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து ஜெகத்ரட்சகன் உச்சநீதிமன்றத்தை அணுகினார். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் முன்பு அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இடைக்கால தடையை நீக்கக் கோரி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். சில தொழில்நுட்ப திருத்தங்கள் செய்ய வேண்டியதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

ஜெகத்ரட்சகன் தரப்பு வழக்கறிஞர் வாதிப்பதில், இந்த விவகாரத்தில் 17 லட்சம் பங்குகள் வாங்கப்பட்டதாக கூறப்பட்டாலும் வெளிநாட்டிற்கு ஒரு ரூபாயும் பணம் செலுத்தப்படவில்லை என விசாரணையில் தெரியவந்ததாக தெரிவித்தார்.

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், அமலாக்கத் துறை தாக்கல் செய்த கூடுதல் மனுவுக்கு பதிலளிக்கும்படி ஜெகத்ரட்சகனுக்கு உத்தரவிட்டனர். மேலும் இரு தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த வழக்கு இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்