தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல்: 6 பேர் போட்டியின்றி தேர்வு உறுதி, இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சட்டப்பேரவை எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தி.மு.க.விற்கு நான்கு இடங்களும், அ.தி.மு.க.விற்கு இரண்டு இடங்களும் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தே.மு.தி.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலா ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க. சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தே.மு.தி.க. சார்பில் சுதீஷ் மற்றும் காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதேபோல், அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சியான பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த ஆறு பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
மற்ற வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், போட்டியில் இவர்கள் மட்டுமே உள்ளனர். வேட்பு மனுவை திரும்ப பெற இன்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆறு பேரைத் தவிர வேறு வேட்பாளர்கள் இல்லாததால், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.