Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 10 Mar 2026

பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் உத்தரவு சர்ச்சை; பணிநிரந்தரம் கோரி மீண்டும் போராட்டம்

மதுரை: அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு நியமனங்களில் சலுகை வழங்கும் வகையில் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள அரசாணை புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களை கற்பிக்க 2012 ஆம் ஆண்டு 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 14 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது 11,773 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களை பணிநிரந்தரம் செய்வோம் என்று பல தேர்தல்களில் அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்து வந்தன.

போராட்டங்கள் நடந்தபோது அரசு சம்பள உயர்வுகள் மூலம் பிரச்சினையை சமாளித்ததாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். கடந்த ஜனவரியில் நடந்த போராட்டத்திற்குப் பிறகு, காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 3,843 உடற்கல்வி, 3,721 ஓவியம், 1,584 தையல், 329 இசை ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் 15 மதிப்பெண் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் கணினி அறிவியல் (2033), வாழ்க்கை கல்வி (192), கட்டடக் கலை (49), தோட்டக் கலை (22) ஆகிய பாட ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள் அரசாணையில் இடம்பெறவில்லை. மேலும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் குறிப்பிடப்படவில்லை என்பதால் ஆசிரியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், தமிழகத்தில் முன்பு தொகுப்பூதியத்தில் பணியாற்றியவர்களை சிறப்பு தேர்வு மூலம் நிரந்தரம் செய்த முன்னுதாரணங்கள் உள்ளதாக கூறினார்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அதேபோன்று சிறப்பு தேர்வு நடத்தி நிரந்தரம் செய்யலாம் என்றும், காலிப் பணியிடங்களை அறிவிக்காமல் சிறப்பு மதிப்பெண் வழங்குவது தீர்வாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பணிநிரந்தரம் தொடர்பான தெளிவான அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும் என்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்