Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 13 Jan 2026

பிரான்ஸ்–இந்தியா பாதுகாப்பு கூட்டணி வலுப்படும்: 114 ரபேல் விமானங்கள் வாங்க திட்டம்

இந்திய விமானப்படையின் சக்தியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பில் 114 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ஏற்கனவே 36 ரபேல் விமானங்களை இந்தியா வாங்கி விமானப்படையில் இணைத்துள்ளது. சமீபத்திய ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது இந்த ரபேல் விமானங்கள் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்திய கடற்படைக்காக 26 ரபேல் விமானங்களை வாங்கவும் மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த தலைமுறை போர் விமானங்கள் குறித்து இந்தியா பரிசீலித்து வரும் நிலையில், அமெரிக்காவின் எப்-35 மற்றும் ரஷ்யாவின் சூ-57 போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க அந்த நாடுகள் தயாராக உள்ளன. இருப்பினும், செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு காரணமாக, மீண்டும் ரபேல் விமானங்களையே வாங்க இந்தியா விருப்பம் காட்டி வருகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், 12 முதல் 18 விமானங்கள் நேரடியாக பறக்கும் நிலையில் வாங்கப்பட்டு உடனடியாக விமானப்படையில் இணைக்கப்படும். மீதமுள்ள விமானங்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், குறைந்தது 30 சதவீத உள்நாட்டு உற்பத்தி பாகங்களுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.

மேலும், இந்த விமானங்களில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்களை பொருத்தும் வகையில் பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் பாதுகாப்பு அமைச்சகத்தில் அடுத்த சில நாட்களில் நடைபெற உள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்தால், அது பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை குழுவின் இறுதி அனுமதிக்கு அனுப்பப்படும். ஒப்பந்தம் நிறைவேறும் பட்சத்தில், இது இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்