Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 13 Jan 2026

ஈரானில் அரசுக்கு எதிரான வன்முறையில் 646 பேர் பலி: அமெரிக்கர்களுக்கு வெளியேறும் எச்சரிக்கை

டெஹ்ரான்:
ஈரான் முழுவதும் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 646 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, கடும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசுக்கு எதிரான இந்த போராட்டங்கள் சில பகுதிகளில் கட்டுக்கடங்காத வன்முறையாக மாறி, உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டு வருகின்றன. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 646 என கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை ஈரான் அரசு வெளியிடாததால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில், ஈரானில் வசித்து வரும் அமெரிக்கர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆர்மீனியா மற்றும் துருக்கி வழியாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதனால் வன்முறை, காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலை மூடல்கள், பொது போக்குவரத்து இடையூறுகள் மற்றும் இணையத் தடைகள் தொடர்கின்றன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஈரான் அரசு மொபைல், லேண்ட்லைன் மற்றும் தேசிய இணைய நெட்வொர்க்குகளுக்கான அணுகலை கட்டுப்படுத்தியுள்ளது. இதனுடன், ஈரானுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில விமான சேவைகள் ஜனவரி 16ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக பாதுகாப்பான வழிகளின் மூலம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்