ராஜ்கோட் ODI: மிட்செல் சதம் – இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து | தொடர் சமநிலை
ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமநிலைப்படுத்தியது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்கினர். ஆரம்பத்தில் ரன் எடுக்க சிரமப்பட்ட இருவரும் பின்னர் வேகம் எடுத்தனர். ரோகித் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். கில் அரைசதம் அடித்து 56 ரன்களில் வெளியேறினார்.
விராட் கோலி 23 ரன்களிலும், ஸ்ரேயஸ் ஐயர் 8 ரன்களிலும் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த கே.எல். ராகுல் நிலைத்து நின்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜடேஜா (27), நிதிஷ் குமார் ரெட்டி (20) உள்ளிட்டோர் அவுட் ஆன நிலையில், ராகுல் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 284 ரன்கள் குவித்தது.
285 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் விரைவில் வெளியேறினர். ஆனால், டேரில் மிட்செல் மற்றும் யங் இணைந்து இந்திய பந்துவீச்சாளர்களை கட்டுப்படுத்தினர். யங் 87 ரன்களில் அவுட் ஆனார். மிட்செல் சதம் கடந்து, 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
47.3 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரில் இரு அணிகளும் 1–1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இதனிடையே, ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் 1403 நாட்களுக்குப் பிறகு விராட் கோலி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா மூன்றாவது இடத்திற்கு சரிந்த நிலையில், நியூசிலாந்து வீரர் மிட்செல் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.