ஒடிஷாவில் சரணடைய முயன்ற நக்சல் தளபதி கொலை; உடல் தோண்டி எடுத்து விசாரணை
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் மாவோயிஸ்ட் அமைப்புக்குள் ஏற்பட்ட உள்கட்டமைப்பு மோதல் காரணமாக முக்கிய தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டம் பகுதியைச் சேர்ந்த அன்வேஷ், ஒடிஷாவில் மாவோயிஸ்ட் பகுதி கமிட்டி உறுப்பினராக செயல்பட்டு வந்தார். மேலும் கலஹண்டி–கந்தமால்–பவுத்–நயகர் பகுதிகளின் தளபதியாகவும் இருந்தார். பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடையதாக கருதப்பட்ட இவரை கைது செய்ய போலீசார் ரூ.22 லட்சம் பரிசுத் தொகை அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 29ஆம் தேதி அன்வேஷ் கொல்லப்பட்டு வனப்பகுதியில் புதைக்கப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கந்தமால் மாவட்டம் தரிங்படி அருகிலுள்ள பகாரி வனப்பகுதியில் நீதிபதி முன்னிலையில் போலீசார் தோண்டி எடுத்து சடலத்தை மீட்டனர். உடல் சிதைந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், மாவோயிஸ்ட் தலைவர் சுக்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் சிலா, ஜாகேஷ் ஆகியோர் இணைந்து அன்வேஷை கொன்றது உறுதி செய்யப்பட்டது. அன்வேஷ், ஒடிஷா போலீசில் சரணடைய விருப்பம் தெரிவித்ததே இந்த கொலைக்கான காரணம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், கடந்த 22ஆம் தேதி கந்தமால் மாவட்டம் நந்தபாலி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜாகேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதாக மாவட்ட எஸ்.பி. ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் உள்ள இந்திராவதி ஆறு கரையோர வனப்பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த ஆண்டில் மட்டும் சத்தீஸ்கரில் 25 நக்சல்கள் என்கவுன்டரில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு 285 நக்சல்கள் பல்வேறு மோதல்களில் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.