உலக கோப்பை ஹாக்கியில் புதிய போட்டி முறை: காலிறுதி ரத்து; அரையிறுதிக்கு நேரடி வாய்ப்பு
உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்த முறை புதிய போட்டி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் வழக்கமாக நடைபெறும் காலிறுதி சுற்று இடம்பெறாது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் 16வது உலக கோப்பை ஹாக்கி தொடர், ஆகஸ்ட் 14 முதல் 30ம் தேதி வரை பெல்ஜியத்தின் வேவ்ரே மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் நடைபெறுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 16 அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய அணி 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் தனது முதல் லீக் போட்டியில் வேல்ஸ் அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
புதிய போட்டி முறை
முதற்கட்டமாக 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
மீதமுள்ள 8 அணிகள் 9 முதல் 16 வரையிலான இடங்களுக்காக போட்டியிடும்.
முதல் 8 அணிகள் 'இ' மற்றும் 'எப்' என இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு அணியும் அடுத்த சுற்றில் தலா இரண்டு போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அரையிறுதி போட்டிகள் ஆகஸ்ட் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடைபெறுகின்றன. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டி ஆகஸ்ட் 29ம் தேதியும், ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டி ஆகஸ்ட் 30ம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்த புதிய முறையால் லீக் சுற்றில் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு அடுத்த சுற்றில் கூடுதல் புள்ளி கிடைப்பதால் அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும் என இந்திய அணி பயிற்சியாளர் கிரெய்க் புல்டன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வீரராக மன்பிரீத் சிங் இடம்பெற்றுள்ளார். 34 வயதான அவர் இதுவரை 417 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த மன்பிரீத், தனது நான்காவது உலக கோப்பை தொடரில் பங்கேற்கிறார்.
இந்திய அணியில் குறைந்த சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரராக 23 வயதான ஆதித்ய அர்ஜுன் உள்ளார். அவர் இதுவரை 13 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கிளாஸ்கோ உணவகத்தில் இந்திய வரைபடத் தவறு: லவ்லினாவை பாராட்டிய பிரதமர் மோடி
1 நாட்கள் முன்பு
காமன்வெல்த் பதக்கங்களுடன் பிரதமர் மோடியை சந்தித்த இந்திய நட்சத்திரங்கள்
2 நாட்கள் முன்பு
செயின்ட் லுாயிஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன்: ரூ.48 லட்சம் பரிசு
4 நாட்கள் முன்பு
கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: காலிறுதிக்கு முன்னேறிய தான்வி சர்மா
5 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்