பா.ஜ. கூட்டணி குறித்த சர்ச்சை: கருணாநிதியை ‘முரட்டு அடிமை’ என சொல்வாரா? – பழனிசாமி சவால்
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் மற்றும் பொன்னேரி தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்தார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், “ஆட்சி போகும் என்ற பயத்தில் தான் இப்போது பேச்சு மாறியுள்ளது” என்றார். மேலும், ஸ்டாலின் டிரஸ்டில் 8,000 கோடி ரூபாய் இருப்பதாகவும், அது பொதுமக்கள் உழைப்பின் பலன்தான் எனவும் கேள்வி எழுப்பினார்.
பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் அ.தி.மு.க. அழுத்தத்தினால் அமல்படுத்தப்பட்டது என்றும், குடும்ப வாரிசு ஆட்சி தொடரக்கூடாது என்றும் தெரிவித்தார்.
உதயநிதி தன்னை ‘பா.ஜ.வின் முரட்டு அடிமை’ என குறிப்பிட்டதை கடுமையாக எதிர்த்து, “அப்படியானால், பா.ஜ.வுடன் கூட்டணி வைத்த உங்கள் தாத்தா கருணாநிதியை அப்படிச் சொல்ல முடியுமா?” என சவால் விடுத்தார். அரசியல் அனுபவம் இல்லாதவர் பொறுப்பில்லாமல் பேசக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், திருவள்ளூரில் உள்ள அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினைகள் மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் தொடர்பான பண வசூல் விவகாரம் குறித்து தகவல் கிடைத்ததால், பழனிசாமி அதனால் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.