தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு; காலை 10 மணிக்கு கலெக்டர்கள் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்., 23) வெளியிடப்படுகிறது. மாநிலம் முழுவதும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான கலெக்டர்கள் காலை 10 மணிக்கு பட்டியலை வெளியிட உள்ளனர்.
2025ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்றன. அதன் பின்னர் டிசம்பர் 19ஆம் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது இருந்த 6.41 கோடி வாக்காளர்களில், 97.30 லட்சம் பேர் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது 5.43 கோடி பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் செய்ய பிப். 10 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதன் மூலம் பெயர் சேர்க்க 22.8 லட்சம், நீக்க 2 லட்சம், திருத்தம் செய்ய 9.90 லட்சம் மனுக்கள் என மொத்தம் 34.7 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கூடுதல் அவகாசத்துடன் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள இறுதி வாக்காளர் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.