ஹிந்து மக்கள் கட்சி மாநாட்டுக்கு தடை: தமிழக அரசை அண்ணாமலை, அர்ஜுன் சம்பத் கடும் விமர்சனம்
சென்னையில் மார்ச் 15ம் தேதி நடைபெறவிருந்த ஹிந்து மக்கள் கட்சி சார்பான “தமிழ், தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாடு”க்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அர்ஜுன் சம்பத் வெளியிட்ட அறிக்கையில், சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறவிருந்த மாநாட்டிற்கு காவல்துறை உள்நோக்கத்துடன் தடை விதித்துள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் மாநாட்டை தொடர்புடைய சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களை போலீசார் அகற்றுவதோடு, கட்சி தொண்டர்களை மிரட்டியும் பொய் வழக்குகள் பதிவு செய்தும் வருவதாகவும் கூறினார்.
மேலும் மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களை உளவுத்துறை மூலம் மிரட்டப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்தத் தடையை சட்டபூர்வமாக எதிர்த்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவோம் என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
அதேபோல் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ஒரு அரசியல் கட்சி நடத்தும் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என கூறினார். தி.மு.க கூட்டணி கட்சிகள் பல்வேறு கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த அனுமதி அளிக்கப்படும் நிலையில், ஹிந்து மக்கள் ஒற்றுமை பேரணிக்கும் மாநாட்டிற்கும் அனுமதி மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், மாநாட்டிற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து ஹிந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.