Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 11 Feb 2026

அமெரிக்காவின் வரி அழுத்தம்: ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளை மிரட்டுகிறது என லாவ்ரோவ் குற்றச்சாட்டு

மாஸ்கோ: இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தடுக்க அமெரிக்கா மிரட்டல் மற்றும் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உக்ரைன்–ரஷ்யா போர் நான்கு ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், ரஷ்யாவின் நிதி ஆதாரங்களை தடுக்க அமெரிக்கா பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

இதன்படி, இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி காரணமாக 25 சதவீத அபராத வரியும் அடங்கியது. பின்னர், இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைத்ததைத் தொடர்ந்து, அபராத வரி ரத்து செய்யப்பட்டு, பரஸ்பர வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் லாவ்ரோவ் கூறுகையில், “உலகப் பொருளாதாரத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா வரிகள் மற்றும் தடைகள் மூலம் அழுத்தம் கொடுக்கிறது. மலிவான ரஷ்ய எரிபொருளை தடுத்து, அதிக விலையுள்ள அமெரிக்க எரிவாயுவை சந்தையில் விற்க முயற்சிக்கிறது. மேலும், பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகம், முதலீடு மற்றும் ராணுவ உறவுகளையும் கட்டுப்படுத்த முயல்கிறது” என்றார்.

மேலும், இந்தியாவுக்கு வரி குறைத்தாலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிபந்தனை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்