Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 10 Feb 2026

ஏ.ஐ. மூலம் போலி தகவல் பரப்பல் சட்டவிரோதம் – சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசின் கடும் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தவறாக பயன்படுத்தி போலி தகவல்கள், ஆபாச படங்கள், போலி ஆவணங்கள் மற்றும் போலியான மின்னணு தரவுகளை இணையதளங்களில் பதிவிடுவது சட்டவிரோதம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘கிராக்’ (Grok) என்ற ஏ.ஐ. தொழில்நுட்பம், சிலரால் தவறாக பயன்படுத்தப்பட்டு சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டது.

இந்த சூழலில், தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகள் 2021-ல் செய்யப்பட்ட திருத்தங்கள் வரும் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புதிய விதிகளின்படி, ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் அனைத்து பதிவுகளும் “சித்தரிக்கப்பட்ட பதிவு” (AI-generated content) என தெளிவாக குறிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த முத்திரை பயனாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் கண்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் இருக்க வேண்டும். அதை அகற்றவோ, அழிக்கவோ அனுமதி இல்லை.

மேலும், ஏ.ஐ. பதிவுகள் சட்ட விதிகளுக்கு உட்படாது என ‘எக்ஸ்’, ‘மெட்டா’, ‘இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் இனி வாதிட முடியாது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பயனாளர்களின் பொறுப்புகள் குறித்து சமூக வலைதளங்கள் அறிவுறுத்தல் வழங்க வேண்டும். போலி செய்திகளை பதிவிட்டால் கணக்கு முடக்கம், அபராதம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைகளும் வழங்கப்பட வேண்டும்.

‘சாட் ஜி.பி.டி.’, ‘ஜெமினி’, ‘கிராக்’ போன்ற ஏ.ஐ. சேவைகளை வழங்கும் தளங்களுக்கு இந்த சட்டம் சிறப்பு எச்சரிக்கையையும் வழங்குகிறது. ஏ.ஐ. கருவிகளை தவறாக பயன்படுத்தினால் கிரிமினல் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், தேர்தல் சட்டங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் பயனாளர்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

மேலும் முக்கியமாக, அரசு மற்றும் போலீஸ் உத்தரவுகளுக்கு சமூக வலைதளங்கள் உடனடியாக பதிலளிக்க வேண்டும். முன்பு 36 மணி நேரமாக இருந்த காலக்கெடு தற்போது 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அவசர வழக்குகளில் 36 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சில நடவடிக்கைகள் 2 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்