Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 10 Feb 2026

இயந்திர கோளாறால் சென்னை–டில்லி ஏர் இந்தியா விமானம் 4 மணி நேரம் தாமதம்

சென்னையில் இருந்து டில்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று காலை 6 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. 165 பயணியர் மற்றும் 6 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 171 பேர் பயணிக்க இருந்தனர். பயணியரை விமானத்தில் ஏற்றுவதற்கு முன் விமானிகள் மேற்கொண்ட வழக்கமான தொழில்நுட்ப பரிசோதனையில் இயந்திர கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

பாதுகாப்பு காரணங்களால் விமானத்தை இயக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது.

பயணியர் அனைவருக்கும் ஓய்வறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பொறியாளர்கள் குழு விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டது. இறுதியாக காலை 10.15 மணியளவில் விமானம் பழுது பார்க்கப்பட்டு, நான்கு மணி நேரம் தாமதமாக டில்லிக்கு புறப்பட்டது.

இதனிடையே, ஏர் இந்தியா விமானத்தில் டில்லி செல்ல இருந்த திமுக எம்.பி. கதிர் ஆனந்த், அவசர காரணங்களுக்காக உடனடியாக டில்லி செல்ல வேண்டியதாக தெரிவித்தார். இதையடுத்து, காலை 6.55 மணிக்கு சென்னையில் இருந்து டில்லி சென்ற மற்றொரு விமானத்தில் அவரை மட்டும் அனுமதித்ததாக கூறப்படுகிறது.

மற்ற பயணியர் சிலர் மருத்துவ அவசர தேவைக்காக பயணம் செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்தும், அவர்களுக்கு மாற்று விமான அனுமதி வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்