Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 10 Feb 2026

அண்ணா பல்கலைக்கழக தற்காலிக பேராசிரியர்கள் பணி நீக்கம்: திமுக அரசு மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

சென்னை: கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசு வீண் விளம்பரங்களுக்கு மட்டுமே பல நூறு கோடி ரூபாய் செலவிட்டு வருவதாகவும், ஆனால் ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து எந்த அக்கறையும் காட்டவில்லை என்றும் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளில், பல்வேறு துறைகளில் சுமார் 15 ஆண்டுகளாக தற்காலிக உதவிப் பேராசிரியர்களாக பணியாற்றி வந்த 328 பேரை கடந்த ஜனவரி 31 ஆம் தேதி பணிநீக்கம் செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நிதிநிலைமை காரணம் கூறி ஆசிரியர்களை பணிநீக்கம் செய்துள்ள திமுக அரசின் இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், தேர்தல் வாக்குறுதி எண் 153-ல் பத்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறிய திமுக, தற்போது அவர்களை பணிநீக்கம் செய்திருப்பது மிகப்பெரிய துரோகம் என்றும் அண்ணாமலை சாடியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே சுமார் 45.44 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர்களை நிரந்தரம் செய்யாமல், காலிப் பணியிடங்களையும் நிரப்பாதது தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

2024–2025 ஆண்டில் மட்டும் ரூ.110 கோடி விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு ஊரக உள்ளாட்சித்துறைக்கு மட்டும் ரூ.500 கோடி விளம்பர செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவும், பணி நிரந்தரம் செய்யவும் நிதி இல்லை என அரசு கூறுவது வேடிக்கையாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.

உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்ட 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் நிரப்பப்படாமல் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் அவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்