MLA க்கள் தகுதி நீக்கம் செல்லும். அடுத்து என்ன நடக்கும் தமிழக அரசியலில்?
சபாநாயகர் 18 MLAக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று நீதிபதி சத்தியநாராயணா தீர்ப்பு வழங்கியுள்ளார்.
ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இப்போதைக்கு இல்லை என்பது தெளிவாகிவிட்டது. எனவே எண்ணிக்கை கணக்குகள் தற்போதைய சூழலில் தேவையில்லை.
தீர்ப்பு தான் வந்துவிட்டதே, இனி ஃப்ளோர் டெஸ்ட் நடத்த எந்த தடையும் இல்லை, ஃப்ளோர் டெஸ்ட் நடத்தலாமே, டிடிவி தினகரன் அவர்களின் ஸ்லீப்பர் செல்களும் வாக்களித்தால் ஆட்சி கவிழ்ந்துவிடுமே என்று அரசியல் களத்தில் முனுமுனுக்கலாம்.
ஆனால் அதை செய்யும் இடத்தில் இருப்பது திமுக. இந்த நிலையில் ஃப்ளோர் டெஸ்ட் வைத்தால் அதிமுக அரசு வென்றுவிடும் என்பது அவருக்குத் தெரியும். ஏனென்றால், ஆட்சியில் இருக்கும் MLA க்கள் ஆட்சிக்காகத்தான் இருக்கிறார்களே தவிர, யாருக்காகவும் ஸ்லீப்பர் செல்களாக இருக்கமாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். அதை ஸ்டாலினும் உணர்ந்திருப்பார். மேலும் அது 6 மாத காலம் ஆட்சியை எந்த பிரச்சனையும் இல்லாமல் நீட்டிக்க வழிவகுத்துவிடும். எனவே ஃப்ளோர் டெஸ்ட் நிச்சயம் நடக்காது.
இப்போது டிடிவி தினகரன் அணியினர் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செல்லதான் வாய்ப்புகள் அதிகம். இடைத்தேர்தலை சந்திப்பதை விட காலத்தை கடத்தி அமமுக அமைப்பை மேலும் வலுப்படுத்தவே அவர் விரும்புவார். அந்த நடவடிக்கைகளுக்கு அவருக்கு காலம் வேண்டும். அதை இந்த மேல்முறையீட்டில் தீர்ப்பு வரும்வரை நீட்டிக்கப்படும் காலம் மூலம் சரிசெய்யத் தான் அவர் விரும்புவார். எனவே நிச்சயம் உச்சநீதிமன்றம் செல்வார்கள்.
இதை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொகுதிகள் காலி என்று அறிவித்து தேர்தலை நடத்த ஆயத்தமாவார். தேர்தல் நடக்காது என்பது அவருக்குத் தெரியும். ஆனால் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அதிமுக தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக காட்டிக் கொள்ளத்தான் முயற்சி எடுப்பார். அதைத்தான் செய்வார்.
திமுக இடைத்தேர்தலை நடத்தவிடாமால் செய்ய அனைத்து முயற்சிகளையும் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு எந்த முன்னோட்டத்தையும் பார்க்க அவர்கள் விரும்பமாட்டார்கள். 18 தொகுதிகளில் பாதி வென்றாலும் கூட அது திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவைத் தரும் பொதுத்தேர்தலில். எனவே அதிமுக அரசு தேர்தலை நடத்த முற்பட்டால் அதற்கு திமுக தடை வாங்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று நீதிமன்நத்தை நாடுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.
எது எப்படி இருந்தாலும் இப்போதைக்கு ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
ஒருவேளை உச்சநீதிமன்றம் MLA க்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினால் ஆட்சி மாறிவிடுமா, கவிழ்ந்துவிடுமா என்றால், அப்போதும் நடக்க வாய்ப்புகள் மிகக்குறைவு. சாத்தியமில்லை என்றே சொல்லலாம்.
ஏனென்றால், முதல்வரை மாற்ற 3 ல் 2 பங்கு கட்சி உறுப்பினர்கள் வேண்டும்.
3 ல் 2 பங்கு உறுப்பினர்களை தினகரன் இழுப்பாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. சாத்தியமில்லை என்பதே யதார்த்தம்.
ஒருவேளை திமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தால் ஆட்சிக்கு ஆபத்து வரும். அப்போது அதிமுக MLA க்கள் 3 ல் 2 பங்கு என்ன முழுவதுமாகவே கூட டிடிவி தினகரன் இடம் செல்வார்கள். யாரிடம் இருக்கிறோம் என்பதை விட ஆட்சியே முக்கியம் என்றுதான் நினைப்பார்கள்.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து ஆட்சி கவிழ்ந்தால் தினகரன் அணி முதல்வர் பதவியை கைப்பற்றும். அது திமுகவிற்கு தான் பலவீனம். அந்த தவறை ஸ்டாலின் நிச்சயம் செய்யமாட்டார்.
ஒருவேளை ஸ்டாலினிடம் தினகரன் உடன்படிக்கை செய்து நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம் தேர்தலை சந்திக்கலாம் என்ற உத்திரவாதம் கொடுத்தால் மட்டுமே ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவார். திமுகவிற்கு உடனடியாக தேர்தல் வருவதுதான் வேண்டும். அதுவும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் நடந்தால் அவர்களுக்கு பலம்.
ஆனால் அதற்குள் உச்சநீதிமன்ற தீர்ப்பு வருமா என்பதை சொல்ல முடியாது.
ஆனால் தினகரனும்ஆட்சியைக் கலைத்து 2 தேர்தலையும் ஒன்றாக சந்திக்க விரும்புவாரா என்பது சந்தேகம் தான். அவருக்கு இப்போது அமமுக கஐசியை வலுப்படுத்த காலம் வேண்டும். கால நீட்டிப்பு அவருக்கு சாதகம்தான்.
எனவே, ஆட்சியைக் கவிழ்த்து தேர்தல் என்றால் மட்டுமே ஸ்டாலின் தினகரனுடன் கை கோர்ப்பார். இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சிக்கு தான் ஸ்டாலின் துணை இருப்பார். தினகரன் அணியிடம் ஆட்சியைக் கொடுத்து அவர்களின் எதிர்காலத்தை மேலும் பலமாக்கும் முட்டாள்த்தனமான வேலையை நிச்யயம் ஸ்டாலின் செய்யமாட்டார்.
அப்படியே செய்தாலும் இருக்கின்ற ஆட்சியைக் கலைத்துவிட்டு திமுகவிற்கு சாதகமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த பாஜகவும் விரும்பாது.
பாஜக-திமுக-டிடிவி என அனைவரும் ஒரே நேர்கோட்டில் வராதவரை எடப்பாடி பழனிசாமி சொன்னது போல் கடப்பாறை வைத்து நெம்பினாலும் அசைக்க முடியாது.
அப்படியே மூன்றும் நேர்கோட்டில் வந்தாலும் அதுவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்குத் தான் சாதகம். பாஜக-திமுக-அமமுக வை எதிர்த்து நிற்கும் சக்தியாக அதிமுக உருவெடுக்கும்.
திமுகவிற்கு இடைத்தேர்தல் நடக்க கூடாது, ஆட்சி தினகரன் அணியிடம் செல்லக் கூடாது, பொதுத்தேர்தலை தான் சந்திக்க வேண்டும்.
தினகரன் அவர்களுக்கு காலம் கடத்துவது சாதகம்தான். பன்னிர்செல்வம் வெளிவந்தபோதே ஆட்சி கலைந்திருந்தால் தினகரன் என்ற ஒரு தலைமையே இப்படி உருவாகியிருக்காது. அதை உருவாக்கியது இதுவரை கிடைத்த கால அவகாசம். எனவே கால நீட்டிப்பை பற்றி அவர் கவலை கொள்ளப்போவதில்லை. அது அவருக்கு சாதகமே.
எடப்பாடி பழினிசாமி அவர்களுக்கு ஃப்ளோர் டெஸ்ட் நடக்க கூடாது, ஆட்சியும் தினகரனிடம் செல்லக்கூடாது, இடைத்தேர்தலும் நடக்கக் கூடாது. முதல்வரின் இந்த விருப்பத்தை அவர் ஸ்டாலினை வைத்து நிறைவேற்றிக் கொள்வார். இந்த காலநீட்டிப்பை தினகரன் பயன்படுத்திக் கொளவார்.
ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர்வது போல் கனவு கண்டுகொண்டே இருப்பார்.
எது எப்படி இருந்தாலும் இருந்தால் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வராக இருப்பார். இல்லையென்றால் தேர்தல். அவ்வளவுதான். முதல்வரை மாற்றுவது என்பது சாத்தியமில்லை.
ஆட்சியின் மீது நேரத்தை செலவிடுவதை விட்டுவிட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது தான் அனைத்து கட்சிகளுக்கும் நன்மை பயக்கும்.
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்