செய்திகள்
⚡ உடனடி செய்தி
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கிய கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனங்களை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீரன் திருமுருகன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல மனுக்களில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கியது சட்டவிரோதமானது என்றும், இதேபோன்ற பிற விபத்து மற்றும் கூட்ட நெரிசல் சம்பவங்களில் இத்தகைய சலுகை வழங்கப்படாத நிலையில், இந்த முடிவு தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும் வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில், மறுவாழ்வு நடவடிக்கையாக கருணை அடிப்படையில் பணி வழங்க அரசின் கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தது. மேலும், 41 உயிரிழப்புகளில் தகுதியும் விருப்பமும் கொண்ட 31 குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கு தற்காலிக அரசு பணி வழங்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெற்று வரும் நிலையில், அரசு அவசரமாக பணி நியமனம் வழங்கியது பொருத்தமற்றது என்று குறிப்பிட்டனர்.
மேலும், சாலை விபத்துகள், பட்டாசு ஆலை விபத்துகள், கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல்வேறு துயர சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்படுவதில்லை என்றும், அரசு பணியில் உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகள் கூட கருணை பணி நியமனத்திற்காக காத்திருப்பதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, சுயதொழில் உதவி உள்ளிட்ட மாற்று மறுவாழ்வு திட்டங்களை அரசு செயல்படுத்தியிருக்கலாம் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இறுதியாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கிய அரசாணை, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு முரணானது எனக் கூறி, அந்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
7 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
7 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் அனஹத் சிங்; 'வரலாற்று சாதனை' என பிரதமர் மோடி பாராட்டு
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்