உடனடி செய்தி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு ஏன் எதிர்ப்பு? மாநில அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு ஏன் எதிர்ப்பு? மாநில அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளை தொடங்குவது தொடர்பான வழக்கில், மும்மொழி கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக திணிக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதையடுத்து, நவோதயா பள்ளிகள் குறித்து புதிய அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை நிலைப்பாட்டை மூன்று வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு பரிசீலிக்கப்பட்டது. விசாரணையின்போது, புதிய அரசு அமைந்துள்ள நிலையில் நவோதயா பள்ளிகள் தொடர்பாக தற்போதைய அரசின் கொள்கை என்ன என்பதை அறிய விரும்புவதாக நீதிமன்றம் தெரிவித்தது. பள்ளிகளை உடனடியாக கட்ட வேண்டும் என்பதல்ல, முதற்கட்டமாக அதற்கான இடங்களை அடையாளம் காண வேண்டும் என்பதே நோக்கம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். தமிழக அரசு தரப்பில், நவோதயா பள்ளிகளில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படுவதால் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக வாதிடப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிமன்றம், மும்மொழி கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை என்றும், மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் மாணவர்கள் விருப்பத்திற்கேற்ப மூன்றாவது மொழியை கற்கும் வகையிலேயே கொள்கை அமைந்துள்ளதாகவும் தெரிவித்தது. ஹிந்தி வேண்டாம் என்றால், வேறு மொழியை தேர்வு செய்வதில் என்ன சிக்கல் என்றும் கேள்வி எழுப்பியது. மேலும், மத்திய அரசின் திட்டம் என்பதற்காக மட்டுமே அதை நிராகரிக்கக் கூடாது என்றும், மாநிலத்திற்கு தனி கல்விக் கொள்கை இருந்தாலும் மத்திய அரசு பள்ளிகளை அனுமதிப்பதில் தடையிருக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. தமிழக அரசு ஆலோசனை நடத்த 12 வாரங்கள் அவகாசம் கோரிய நிலையில், மூன்று வாரங்களுக்குள் தற்போதைய அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. விசாரணையின் போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மூன்றாவது மொழியை 9-ஆம் வகுப்பில் அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, 5 அல்லது 6-ஆம் வகுப்பிலிருந்தே தொடங்குவது மாணவர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்ற கருத்தையும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

தொடர்புடைய செய்திகள்

“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
9 மணி நேரங்கள் முன்பு
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
9 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு
காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு
9 மணி நேரங்கள் முன்பு
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்