Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 09 Feb 2026

காஞ்சிபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பழமையான மண்டபம் இடிப்பு மனசாட்சிக்கு புறம்பானது: சென்னை உயர்நீதிமன்றம்

காஞ்சிபுரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலின் பழமையான மண்டபத்தை, வாஸ்து சாஸ்திரம் பொருந்தவில்லை என்ற காரணத்தால் இடித்த நடவடிக்கை முற்றிலும் மனசாட்சிக்கு புறம்பானது என சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள இக்கோவிலில் நடைபெறும் சீரமைப்பு பணிகளால் பாதிக்கப்பட்டதாக கூறி, அப்பகுதி குடியிருப்பாளர்கள் வசந்தா மற்றும் சண்முகவேல் ஆகியோர் நீதிமன்றத்தை அணுகினர். கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளால் தங்களது வீட்டிற்குள் செல்ல முடியவில்லை என்றும், அந்த பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் கோரிக்கை வைத்தனர்.

இந்த வழக்கு நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை தரப்பில் கோவில் மண்டபம் வாஸ்து விதிகளுக்கு ஒத்துவரவில்லை என்பதால் இடிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பழைய புகைப்படங்களை ஆய்வு செய்த நீதிபதி, அந்த மண்டபம் புராதனமானதும் முறையாக அமைந்ததும் எனக் குறிப்பிட்டார். பழமையான கட்டிடத்தை திடீரென வாஸ்து காரணம் கூறி இடித்தது நியாயமற்ற செயல் என்றும், ஒருமுறை இடிக்கப்பட்ட மண்டபத்தை மீண்டும் அதேபோல் கட்ட இயலாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, கோவில் கட்டப்பட்ட காலம் மற்றும் சீரமைப்பு தொடர்பான முழு அறிக்கையை அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதுவரை எந்தவித சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்