முஸ்தபிஜுர் ரஹ்மான் விடுவிப்பு: ஐபிஎல் ஒளிபரப்புக்கு வங்கதேச அரசு தடை
இந்தியாவில் நடைபெற உள்ள பிரிமியர் லீக் ‘டி20’ தொடரின் 19வது சீசன் மார்ச் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில், வங்கதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மானை ரூ.9.20 கோடிக்கு கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.
இந்நிலையில், இந்தியா – வங்கதேசம் இடையேயான அரசியல் மற்றும் சமூக சூழ்நிலைகள் காரணமாக, முஸ்தபிஜுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற அழுத்தம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, பிசிசிஐ அறிவுறுத்தலின் பேரில் கோல்கத்தா அணி முஸ்தபிஜுர் ரஹ்மானை விடுவித்ததாக தகவல் வெளியானது.
பிரிமியர் லீக் வரலாற்றில் முதல் முறையாக ஒரு வீரர் இவ்வாறு அரசியல் காரணங்களால் விடுவிக்கப்பட்ட சம்பவமாக இது கருதப்படுகிறது. இந்த முடிவு வங்கதேச மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வங்கதேச இடைக்கால அரசின் விளையாட்டுத்துறைக்கான ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், சமூக வலைதளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார்.
“எந்த சூழ்நிலையிலும் வங்கதேசமும், அதன் கிரிக்கெட் வீரர்களும் அவமானப்படுத்தப்படுவதை ஏற்க முடியாது. அடிமைத்தனத்தின் காலம் முடிந்துவிட்டது” என அவர் பதிவிட்டார்.
இந்த எதிர்ப்புகளை தொடர்ந்து, பொதுமக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதாகக் கூறி, மார்ச் 26ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரை வங்கதேசத்தில் ஒளிபரப்பு செய்ய இடைக்கால அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து வங்கதேச தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் முகமது பரோஸ் கான் வெளியிட்ட உத்தரவில்,
“அடுத்த அறிவிப்பு வரும் வரை ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் வங்கதேசத்தில் ஒளிபரப்பப்படக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.