மாநிலங்களுக்கு நிதி குறைப்பு இல்லை: மத்திய பட்ஜெட் விவாதத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்
புதுடில்லி: எந்த மாநிலத்திற்கும் அல்லது அரசு திட்டங்களுக்கும் நிதி நிறுத்தப்படவோ குறைக்கப்படவோ இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தினார்.
ராஜ்யசபாவில் மத்திய பட்ஜெட் குறித்த விவாதத்திற்கு பதிலளித்த அவர், மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது என்றார். கடந்த காலங்களில் கஜானாவில் இருந்து வெளியேறிய தொகையை அடிப்படையாக வைத்து செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்டதாகவும், அந்த தொகை முழுமையாக பயன்படுத்தப்பட்டதா என்பது சரியாக கண்காணிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
தற்போது செலவினங்கள் அனைத்தும் கண்காணிப்பு முறையில் பதிவு செய்யப்படுகின்றன. தேவைக்கேற்ப மட்டுமே நிதி வெளியிடப்படுகிறது. இதை நிதி குறைப்பு என கூறுவது தவறான புரிதல் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், மத்திய நிதி என்பது ஒவ்வொரு வரி செலுத்துவோரின் உழைப்பின் பலன் என்பதால், அதனை பொறுப்புடன் பயன்படுத்துவது அரசின் கடமை என்றும் தெரிவித்தார். அதிகமானோர் வருமானவரி செலுத்துவது நடுத்தர மக்களுக்கு சுமையாக அல்ல, நாட்டின் வளர்ச்சிக்கான பங்களிப்பாகும் என்றும் அவர் கூறினார்.