Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
விளையாட்டு • 03 Jan 2026

சுப்மன் கில் தான் இந்தியாவின் அடுத்த கோலி – இர்பான் பதான் பாராட்டு

இந்திய அணியின் இளம் நட்சத்திரமும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனுமான சுப்மன் கில், எதிர்காலத்தில் விராட் கோலி போல ஒரு மிகப்பெரிய வீரராக உருவாகும் திறன் கொண்டவர் என முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5 சதம், 1 அரைசதம் உட்பட 950 ரன்கள் எடுத்துள்ள சுப்மன் கில், 79.16 என்ற சிறப்பான சராசரியுடன் முதலிடத்தில் உள்ளார். 2025-ஆம் ஆண்டில் விளையாடிய 11 ஒருநாள் போட்டிகளில் 490 ரன்கள் குவித்துள்ளார்.

டி-20 போட்டிகளில் தொடர்ச்சியான ஏமாற்றம் காரணமாக உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை என்றாலும், மீண்டும் அணிக்கு திரும்பும் நோக்கில் கில் காத்திருக்கிறார்.

இதுகுறித்து இர்பான் பதான் கூறுகையில், “கோலி 19 வயதில் இந்திய அணிக்குள் நுழைந்தபோது சச்சினுடன் ஒப்பிடப்பட்டார். அதுபோலவே, இன்று சுப்மன் கில்லை ‘அடுத்த கோலி’ என ஒப்பிடுவது இயல்பானது. உண்மையில், அந்த அளவுக்கு வளர தேவையான அனைத்து தகுதியும் சுப்மன் கில்லிடம் உள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டன் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருப்பது, அவரை ஒரு பெரிய நட்சத்திரமாக உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்,” என்றார்.

வரவுள்ள நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்குத் தயாராகும் வகையில், சுப்மன் கில் விஜய் ஹசாரே டிராபி தொடரில் பஞ்சாப் அணிக்காக பங்கேற்று வருகிறார். இன்று சிக்கிம் அணிக்கும், ஜனவரி 6-ஆம் தேதி கோவா அணிக்கும் எதிராக அவர் விளையாட உள்ளார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்