சட்டசபையில் 7.5% இடஒதுக்கீடு விவகாரம்: திமுக-அதிமுக கடும் மோதல்
சென்னை: மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டை யார் வலியுறுத்தி சட்டமாக்கினர் என்ற விவகாரம் தமிழக சட்டசபையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், “கவர்னர் மாளிகை முன்பு எதிர்க்கட்சியாக இருந்த திமுக நடத்திய போராட்டத்தின் பலனாகவே 7.5% இடஒதுக்கீடு சட்டமாகியது” என்று தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டை திமுக தான் வலியுறுத்தியது என்பது உண்மைக்கு புறம்பானது. தவறான தகவல்கள் பேசப்படுகின்றன,” என்றார்.
இதனைத் தொடர்ந்து, “அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர 7.5% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது இபிஎஸ் தலைமையிலான அதிமுக அரசு தான்” என கே.பி. முனுசாமி தெரிவித்தார். அமைச்சர் மா. சுப்பிரமணியனின் பேச்சை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் சட்டசபையில் காரசாரமான விவாதம் ஏற்பட்டது.
மேலும், பொருளாதார வளர்ச்சி தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் இபிஎஸ் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “அதிமுக ஆட்சியில் ஒற்றை இலக்க வளர்ச்சி மட்டுமே இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது,” என்றார்.
இதற்கு பதிலளித்த இபிஎஸ், “திமுக ஆட்சியில் மட்டுமே உற்பத்தி அதிகம் என கூறுவது தவறு. எங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் தெரிவித்தோம். விளம்பரம் தேடவில்லை. விளம்பர அரசியலில் தற்போதைய அரசு ஈடுபட்டுள்ளது,” என்றார்.
மேலும், “திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளை சேர்த்தே 11.19 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது,” என்றும் தெரிவித்தார்.