இந்தியா vs நெதர்லாந்து: அபிஷேக் சர்மா மீள வருவாரா? ஆமதாபாதில் 4வது வெற்றி குறி!
ஆமதாபாத்: 10வது டி-20 உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்தை இன்று குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள மோடி மைதானத்தில் சந்திக்கிறது. இந்திய அணி ஏற்கனவே 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறி விட்ட நிலையில், நெதர்லாந்து வெளியேறியுள்ளது.
இந்திய ரசிகர்கள் அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக டக் அவுட்டான அவர், நமீபியாவுக்கு எதிரான போட்டியில் வயிற்றுப் பிரச்னையால் விளையாடவில்லை. கடந்த 6 டி-20 போட்டிகளில் 4 முறை டக் அவுட்டாகியுள்ளார். பவர் பிளே ஓவர்களில் டீப் கவர் திசையில் ரன் சேர்ப்பது இவரது பலம். ஆனால் எதிரணிகள் சரியான பீல்டிங் அமைப்பால் அவரை கட்டுப்படுத்தினர். இன்றைய போட்டியில் பொறுமையுடன் விளையாடுவது அவசியம்.
இஷான் கிஷான் சிறந்த பார்மில் உள்ளார். அவரது அதிரடி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'சுழல்' சவால்
இந்திய முன்னணி பேட்டர்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிரமப்படுகின்றனர். நமீபிய கேப்டன் எராஸ்மஸ் 4 விக்கெட் எடுத்தார். பாகிஸ்தானின் சைம் அயூப், உஸ்மான் தாரிக் சுழலில் தொல்லை கொடுத்தனர். நெதர்லாந்து அணியிலும் ஆர்யன் தத், ரோலப் வான்டர் மெர்வி ஆகிய இரு ஸ்பின்னர்கள் உள்ளனர். திலக் வர்மா, சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே கவனமாக விளையாடினால் இந்தியா தொடர்ந்து நான்காவது வெற்றியை பெறலாம்.
பந்து வீச்சு மாற்றம்?
வேகப்புயல் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம். அர்ஷ்தீப் சிங், சிராஜ் அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் சுழலில் தாக்கம் செலுத்தலாம். வாஷிங்டன் சுந்தரை களமிறக்கும் திட்டமும் உள்ளது.
நெதர்லாந்து பலவீனம்
நெதர்லாந்து பேட்டிங் பலவீனமாக உள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக 103 ரன்னுக்கு சுருண்டது. கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், லெவிட், ஆக்கர்மென் ஆகியோர் பொறுப்புடன் விளையாட வேண்டும்.
மழை நிலவரம்
ஆமதாபாத் மோடி மைதானத்தில் ரன் குவிக்க ஏற்ற ஆடுகளம் உள்ளது. இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை.
முந்தைய மோதல்
டி-20 உலக கோப்பை 2022ல் சிட்னியில் நடந்த போட்டியில் இந்தியா 179/2 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து 123/9 என தோல்வியடைந்தது.