செய்திகள்
⚡ உடனடி செய்தி
கோவில் நிதி ஹிந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல்
கோவை: தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களின் நிதி, கோவில் பராமரிப்பு மற்றும் ஹிந்து சமூக நலத் திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் தேசிய பொது செயலாளர் மிலிந்த் பராண்டே வலியுறுத்தியுள்ளார்.
கோவை மதுக்கரை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களின் சுகாதார தேவைக்காக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையை துவக்கி வைத்த மிலிந்த் பராண்டே, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
நாடு முழுவதும் அமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், இரண்டு லட்சம் கிராமங்களை சென்றடையும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், டிசம்பருக்குள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோரை அமைப்பில் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
சுகாதாரம், கல்வி, சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட சேவை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கோவையில் தொடங்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவை, அடுத்த மாதம் திருச்சியிலும் தொடங்கப்படும் என்றும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பல்வேறு சேவை திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள ஏராளமான ஹிந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், கோவில்களுக்கு பக்தர்கள் வழங்கும் நிதி மற்றும் சொத்துக்கள், கோவில் பராமரிப்பு, வழிபாட்டு பணிகள் மற்றும் ஹிந்து சமூக நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கோவில் சேவைக்காக வழங்கப்பட்ட நிலங்கள் வேறு பயன்பாடுகளுக்கு மாற்றப்படக் கூடாது என்றும், அவ்வாறு பயன்படுத்தப்படுவது தெரியவந்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், ஹிந்து கோவில்களின் நிர்வாகத்தை ஹிந்து சமூகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்பதே விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய நோக்கம் என்றும், இதுகுறித்து அரசுடன் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சாலை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களுக்காக கோவில்களை அகற்றும் முன், சம்பந்தப்பட்ட ஹிந்து மத அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும், ஒருதலைப்பட்சமான முடிவுகளை அரசு எடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அனைத்து சமூகத்தினரிடமும் அரசு சமமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஹிந்து சமூகத்தின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது என்றும் மிலிந்த் பராண்டே தெரிவித்தார்.
`
தொடர்புடைய செய்திகள்
வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
4 மணி நேரங்கள் முன்பு
கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு
4 மணி நேரங்கள் முன்பு
நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
1 நாட்கள் முன்பு
தண்ணீர் சேமிப்பில் நவீன தொழில்நுட்பம் அவசியம்; பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்