உடனடி செய்தி

கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை

கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
தமிழகத்தின் முக்கிய கோவில்களில் மொபைல் போன் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை, நடைமுறையில் பக்தர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, இந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அளிப்பது குறித்து அறநிலையத்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவில்களின் ஆன்மிக சூழலை பாதுகாக்கும் நோக்கில், கடந்த 1-ம் தேதி முதல் முக்கிய கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்ல தடை அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், மொபைல் போன்களை பாதுகாப்பு அறையில் ஒப்படைத்து மீண்டும் பெற்றுச் செல்லும் நடைமுறையில் பக்தர்கள் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். மொபைல் போன் பாதுகாப்பிற்காக வசூலிக்கப்படும் 5 ரூபாய் கட்டணம், சில்லரை பிரச்னை காரணமாக பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் இடையே வாக்குவாதத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும், டிஜிட்டல் கட்டணங்களை பெரும்பாலும் நம்பியுள்ள பக்தர்கள், மொபைல் இல்லாததால் அர்ச்சனை பொருட்கள் மற்றும் பிரசாதம் வாங்குவதிலும் சிரமப்படுகின்றனர். பிரபலமான கோவில்களில் தரிசனம் செய்து வெளியே வர பல மணி நேரம் ஆகும் நிலையில், நீண்ட நேரம் மொபைல் போன் இல்லாமல் இருப்பது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவும் அவசர தேவைகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்துவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான பக்தர்கள் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதில்லை என்றும், ஒரு சிலர் செய்யும் தவறுக்காக அனைத்து பக்தர்களுக்கும் முழுமையான தடை விதிப்பது தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, கோவிலுக்குள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என்றும், இதற்காக கண்காணிப்பு குழுக்களை அமைக்கலாம் என்றும் பக்தர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். இதற்கிடையே, விசேஷ நாட்களில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொபைல் போன் தடையால் ஏற்படும் சிரமங்கள் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாகவும், கருவறை பகுதிகளைத் தவிர வெளிப் பிரகாரங்களில் கட்டுப்பாடுகளுடன் மொபைல் போன் எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 12 நிபந்தனைகளுடன் அனுமதி
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 12 நிபந்தனைகளுடன் அனுமதி
5 மணி நேரங்கள் முன்பு
நேபாள சுரங்கத்தில் 9 நாட்கள் போராட்டம்: உயிருடன் மீட்கப்பட்ட 2 தொழிலாளர்கள்
நேபாள சுரங்கத்தில் 9 நாட்கள் போராட்டம்: உயிருடன் மீட்கப்பட்ட 2 தொழிலாளர்கள்
5 மணி நேரங்கள் முன்பு
வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
1 நாட்கள் முன்பு
கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு
கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்