உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி

“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
புதுடில்லி: சர்வதேச முடிவெடுக்கும் அமைப்புகளில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், பிறர் உருவாக்கும் விதிகளை பின்பற்றுபவர்களாக மட்டுமின்றி, உலகளாவிய விதிகளை உருவாக்கி வழிநடத்துபவர்களாகவும் மாற வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் அமைப்பின் 18வது உச்சி மாநாடு தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷீ ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். வளர்ந்து வரும் நாடுகளின் நலன்களை முன்னெடுக்கும் முக்கிய சர்வதேச தளமாக பிரிக்ஸ் உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். உலக மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதத்தை பிரிக்ஸ் நாடுகள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் மனிதநேயம் மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்டு, புதுமை, ஒத்துழைப்பு, நீடித்த வளர்ச்சி மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் பிரதமர் கூறினார். சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் தேவை பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், குளோபல் சவுத் எனப்படும் வளர்ந்து வரும் நாடுகள், பிற நாடுகள் உருவாக்கிய விதிகளை ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்களாக மட்டும் இருக்கக் கூடாது என்றார். உலகளாவிய நெருக்கடிகளின் தாக்கத்தை அதிகம் எதிர்கொள்ளும் நாடுகள் குளோபல் சவுத் நாடுகளாக இருந்தாலும், அந்த நெருக்கடிகள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் சர்வதேச அமைப்புகளில் அவற்றின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு நாட்டின் குரலும் உலகளவில் பிரதிபலிக்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பு நாடும் தனது பங்களிப்பை வழங்க வேண்டும். உலக அமைப்புகளின் நிர்வாகத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்கான 10 அம்சத் திட்டத்தை அனைத்து நாடுகளும் இணைந்து உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். அடுத்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்குள் இந்தத் திட்டத்தை ‘பிரிக்ஸ் சீர்திருத்த செயல்திட்டம்’ என்ற பெயரில் உருவாக்க முயற்சி செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார். இதில் பிரதிநிதித்துவம், செயல்பாட்டுக்கான பொறுப்பு மற்றும் விதிகளை உருவாக்குதல் ஆகிய மூன்று அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறினார். “எதிர்காலம் அனைவருக்கும் பொதுவானது என்றால், அந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் உரிமையும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும், பிரிக்ஸ் நாடுகள் யாருக்கும் எதிரான அமைப்பாக செயல்படாமல், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அணுகுமுறையுடன் முன்னேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அமைதிக்கு பிரிக்ஸ் பங்களிக்க வேண்டும்: ஜின்பிங் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஷீ ஜின்பிங், மேற்காசியா மற்றும் வளைகுடா பகுதிகளில் அமைதியை மீட்டெடுப்பதில் பிரிக்ஸ் நாடுகள் பங்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். போர் காரணமாக அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும், இது சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களுக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார். பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் உள்விவகாரங்களில் தலையிடுவதை பிரிக்ஸ் நாடுகள் எதிர்க்க வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவு துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி புதிய தொழில்மயமாக்கலை ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஜின்பிங் கூறினார். ராமேஸ்வரம் கோவில் பின்னணியில் வரவேற்பு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபத்திற்கு வந்த ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங், ஈரான் அதிபர் பெஷெஸ்கியான் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி நேரில் வரவேற்றார். இதற்காக அமைக்கப்பட்டிருந்த பின்னணியில் தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் பிரகாரம் இடம்பெற்றிருந்தது. சீன அதிபர் ஜின்பிங்கிடம் கோவிலின் சிறப்புகளை பிரதமர் மோடி விளக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் புகைப்படம் பிரிக்ஸ் மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர். ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ஈரான் அதிபர் பெஷெஸ்கியான் ஆகியோருடன் பிரதமர் மோடி இருந்தபோது, சில பிரதிநிதிகள் புகைப்படம் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு பேச்சு மாநாட்டுக்கு இடையே மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், வியட்நாம் பிரதமர் லெ மின் ஹங், எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி, அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரதமர் மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்புகளில் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
29 நிமிடங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
38 நிமிடங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்