'எப்.சி.ஆர்.ஏ., 2.0 அமலானால் பொருளாதார வளர்ச்சியும், நாட்டின் பாதுகாப்பும் வலுப்படும்' - ஆடிட்டர் சேகர்
சென்னை: வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் திருத்த முன்வரைவு எனப்படும் எப்.சி.ஆர்.ஏ., 2.0 நடைமுறைக்கு வந்தால், வெளிநாட்டு நிதி பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு வலுப்படும் என ஆடிட்டர் சேகர் தெரிவித்தார்.
பா.ஜ., தொழில் துறை வல்லுனர் பிரிவு சார்பில் இந்தியாவில் வெளிநாட்டு நிதி பங்களிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய ஆடிட்டர் சேகர், எப்.சி.ஆர்.ஏ., சட்டத்திருத்த முன்வரைவு கடந்த மார்ச்சில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் விவாதத்திற்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: எப்.சி.ஆர்.ஏ., சட்டம் 2010ல் கொண்டுவரப்பட்டபோது சுமார் 43 ஆயிரம் தன்னார்வ அமைப்புகள் இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 3.50 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், பெரும்பாலான அமைப்புகள் புதிய சட்டத்திருத்த முன்வரைவின் விதிகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
சட்டத்திருத்தத்தில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள்
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் தங்களது பதிவை முறையாக புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. கணக்குகள் மற்றும் வெளிநாட்டு நிதி பயன்பாடு தொடர்பான விவரங்களை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வதற்கான நடைமுறைகளும் வலுப்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.
ஒரு அமைப்புக்கு வழங்கப்பட்ட முந்தைய வெளிநாட்டு நிதியில் 75 சதவீதத்தை பயன்படுத்திய பிறகே அடுத்த தவணை நிதியை பெற முடியும் என்ற விதியும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கல்வி, சுகாதாரம், சமூக மேம்பாடு உள்ளிட்ட எந்த நோக்கத்திற்காக நிதி பெறப்படுகிறதோ, அந்த நோக்கத்திற்காக மட்டுமே நிதியை பயன்படுத்த வேண்டும் என்றும், வெளிநாட்டு நிதி மதமாற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைப்புகளின் ஆவணங்களை எளிதாக சரிபார்க்கும் வகையில் பான் எண் உள்ளிட்ட அடையாள விவரங்கள் கட்டாயமாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
வெளிநாட்டு பணப்பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதுடன், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதே எப்.சி.ஆர்.ஏ., 2.0 சட்டத்திருத்தத்தின் நோக்கம் என ஆடிட்டர் சேகர் கூறினார்.
“எப்.சி.ஆர்.ஏ., 2.0 நடைமுறைப்படுத்தப்படுவதால் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதுடன், நாட்டின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பா.ஜ., அனைத்து அணிகளின் ஒருங்கிணைப்பாளர் ராகவன், தொழில்துறை வல்லுனர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராமன், மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
நீட், எப்.சி.ஆர்.ஏ., சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்
8 மணி நேரங்கள் முன்பு
'எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்ததே அரசின் சாதனை' - பழனிசாமி விமர்சனம்
8 மணி நேரங்கள் முன்பு
கொலம்பியாவில் சக்திவாய்ந்த 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 111 பேர் பலி; நாடு தழுவிய அவசரநிலை
1 நாட்கள் முன்பு
அம்பாசமுத்திரத்தில் மீண்டும் சுவாமி சிலைகள் சேதம்: உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்