உடனடி செய்தி

காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு

காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. சட்டசபையில் த.வெ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைச்சரவைக்கு வெளியே உள்ளன. இதற்கிடையே, விஜயை த.வெ.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் 'வருங்கால பிரதமர்' என குறிப்பிடத் தொடங்கியிருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் ராகுல் பிரதமர் வேட்பாளராக கருதப்படும் நிலையில், தங்கள் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சி நடத்தும் விஜயை த.வெ.க.வினர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதை அக்கட்சியினர் விரும்பவில்லை. இதன் தொடர்ச்சியாக, ராகுலை த.வெ.க. ஏற்காவிட்டால் தமிழக அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் கூட்டணிக்குள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், முதல்வர் விஜயை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களின் கருத்துகளும் த.வெ.க. கூட்டணிக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலர் சண்முகம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், தமிழக அரசு மக்களுக்கு நல்ல ஆட்சியையும் திட்டங்களையும் வழங்கினால் ஆதரிப்போம் என்றும், செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாவிட்டால் எதிர்ப்போம் என்றும் தெரிவித்தனர். ஏழை மக்களின் நலனுக்காக தங்களது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்றும் கூறினர். மேலும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள்தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும் என்றும், அதிகாரிகள் முதல்வரை வழிநடத்தும் நிலை இருக்கக்கூடாது என்றும் அவர்கள் விமர்சித்தனர். த.வெ.க. அமைச்சர் பதிலடி கம்யூனிஸ்ட் தலைவர்களின் இந்தக் கருத்துகள் த.வெ.க. தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், தமிழக அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிவித்தார். கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாக விமர்சித்த அவர், தற்போதைய ஆட்சியில் அதுபோன்ற நிலை இல்லை என்றார். திண்டுக்கல் அருகே கம்யூனிஸ்ட் கட்சியினரின் விபரங்கள் சேகரிக்கப்பட்ட சம்பவம் தற்செயலாக நடந்ததாகவும், அரசின் கவனத்திற்கு வந்தவுடன் அதற்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார். ஒரு தனிப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து தமிழக அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறுவது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சில அதிகாரிகள் செய்யும் தவறுகளை வைத்து ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் விமர்சிக்கக் கூடாது என்றும் அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
7 மணி நேரங்கள் முன்பு
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
7 மணி நேரங்கள் முன்பு
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
3 நாட்கள் முன்பு
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 12 நிபந்தனைகளுடன் அனுமதி
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 12 நிபந்தனைகளுடன் அனுமதி
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்